தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம்,
விரல் ரேகை பிரிவு ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா. மூர்த்தி வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி, அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Parade) பயிற்சி நடைபெற்றது.
பின் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உடமைகள் மற்றும் உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என சோதனை செய்து, காவல்துறையினரின் அரசு வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்பு காவலர்களின் குறைகள் கேட்டறியப்பட்டு அதை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன், துணை காவல் கண்காணிப்பாளர் பழனி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.