தென்காசி மாவட்ட ஆட்சியரி டம் இன்று பூலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி குணரத்தினம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: -
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பூலாங்குளம் ஊராட்சி அயோத்தியாபுரிபட்டணம் மேற்கு பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனுடன் எம்சாண்ட் நிறுவனமும் செயல்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகளும், விதி மீறல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சுப்பிரமணிய புரத்திற்கு மேற்கே ராமநாத புரத்திற்கு தெற்கு பகுதியில் தற்போது எவ்வித அனுமதியும் இன்றி மற்றொரு கல்குவாரியை அந்த தனியார் நிறுவனமானது தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்குவாரிகளில் இருந்து விதிமுறைகளை மீறி 12 சக்கர வாகனங்கள் மூலம் மணல் (எம்சாண்ட்) அதிக பாரத்துடன் கேரளா போன்ற பகுதிகளுக்கு பொதுமககள் அதிக நடமாட்டம் உள்ள குறுகிய சாலை உள்ள பகுதிகள் வழியாக கொண்டு செல்கின்றனர்.
இதனால் பெரிய அளவில் விபத்துகளும், சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களும் சேதமடைகின்றன. எனவே இந்த தனியார் குவாரி மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.