தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செங்குந்தர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இத்திருவிழா இன்று காலை கொடியேற்றுதலுடன் தொடங்குகிறது. முன்னதாக செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் கால்நடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு சைவ சித்தாந்த சபை சார்பில் தேவார இன்னிசையும், பேராசிரியர் மோகனசுந்தரத்தின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறுகிறது. 2 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சக்தி கும்பம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு சிவபரத்துவ நிச்சயம் என்ற தலைப்பில் பே. மாணிக்கவாசகம் சமயச் சொற்பொழிவாற்றுகிறார். 3 ஆம் நாளான ஜூன் 6 ஆம் தேதி இரவு 8 மணியளவில் சுவாமி, அம்பாள் மாதாங்கோயில் தெருவில் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
புலவர் ச. பாலசுப்பிரமணியன் வேட மூர்த்தி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா 10 ஆம் நாளான ஜூன் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை அம்பாள் புஷ்ப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.