தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து, நகரமன்றத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் மனுவளித்தார்.
அதன் விவரம்: பெரிய நகராட்சியான கடையநல்லூரில் தாமிரவருணி மற்றும் உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே தாமிரவருணி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் நகராட்சியின் 33 வார்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீர் வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக, நகரமன்றத்தின் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் மற்றும் 493 ஊரக பகுதிகள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்த அமைச்சருக்கு நன்றி.
மேலும், கடையநல்லூர் நகராட்சியில் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின்விளக்கு வசதி போன்றவற்றை செயல்படுத்திட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கும்போது, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன், மாவட்டப் பிரதிநிதி பொன். செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.