தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம், அதன் தலைவர் எம். கணேஷ் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தங்கப்பாண்டியன், செயல் அலுவலர் சுஷ்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் ராஜகணபதி தீர்மானங்களை வாசித்தார்.
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியானது உலகளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. 8 வார்டுகளை உள்ளடக்கி 7.68 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாக இருப்பினும், பெரும்பாலான பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. இப் பேரூராட்சியில் பேரருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் இடம்பெற்றுள்ளன.
கிராம ஊராட்சியாக இருந்த குற்றாலம், கடந்த 1955-இல் நகராட்சியாகவும், பின்னர் 1975-இலிருந்து முதல்நிலை நகராட்சியாகவும் செயல்பட்டது. அதன் பின்னர் 1997 ஆகஸ்ட் 13 முதல் சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இப் பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக்க அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், அதற்காக அடிப்படை புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளன.