தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தொர்வு நிலை பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 26.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவிடம், பேரூராட்சித் தலைவர் க. சுந்தரராஜன் மனு அளித்தார்.
அதன் விவரம்: ஆய்க்குடி தொர்வுநிலை பேரூராட்சியானது 15 வார்டுகளைக் கொண்டது. 25 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் ஆய்க்குடி, அகரக்கட்டு, கம்பிளி, அனந்தபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. அனந்தபுரத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குழாய் இணைப்புப் பணிக்கு ரூ. 60 லட்சம், முந்திரி தோட்டத்தில் தினசரி காய்கனி சந்தை உருவாக்க ரூ. 4.75 கோடி, அகரக்கட்டு பகுதியில் சிமென்ட் சாலை, வடிகால்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் வசதி ஏற்படுத்த ரூ. 85 லட்சம், அகரக்கட்டு - தென்காசி சாலையை தார்சாலையாக மாற்ற ரூ. 2 கோடி, ஆய்க்குடி சிவன் கோயில் மைதானம் மற்றும் ரதவீதிகளில் சிமென்ட் சாலை, தடுப்புச் சுவர் அமைக்க ரூ. 3 கோடி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 26.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.