சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ. தெக்கூர் கிராமக்கோயிலாக அருள்மிகு பச்சை மூங்கிலுடைய அய்யனார் கோயில் உள்ளது. இந்நிலையில் இக்கோயில் நிலங்கள் பூசாரியின் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சார்பில் கோயில் நிலங்களை கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணப்பித்தனர். அதற்கான நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும், வருவாய்த்துறையும் மேற்கொண்டு பூசாரிகள் பெயரில் இருந்த பட்டாவை கோயில் பெயருக்கு மாற்றம் செய்தனர். இப்பிரச்னை காரணமாக கோயிலில் பூஜைகள் செய்யும் பூசாரிகள், முறையாக தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவைகளில் பூசாரிகளால் பூஜை நடத்தப்படவில்லை. கோவில் சொத்துகளை தங்கள் பெயரில் மீண்டும் மாற்றம் செய்தால்தான் கோயில் மற்றும் திருவிழாக்களில் பூஜைகள் நடத்தப்படும் என தெரிவித்தனராம்.
இந்நிலையில், பொங்கல் விழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நிகழாண்டில் நடைபெறவுள்ள நிலையில், கோயில் பூஜைகளை பூசாரிகள் முறையாக அய்யனாருக்கு செய்ய வேண்டுமெனவும், அறநிலையத்துறை சார்பில் கோயிலுக்கு தனி மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் மனு அளித்தனர்.