சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஊத்துப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ராமு என்ற ஒரே ஒரு தலைமை ஆசிரியை மட்டும் பணிபுரிந்து வருகிறார். தலைமை ஆசிரியையான ராமு குழந்தைகளுக்கு முறையாக கற்பிப்பது இல்லை என்றும் வேலை வாங்குவதாகவும் கூறி அவரை கண்டித்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். வேண்டாம் வேண்டாம் தலைமை ஆசிரியர் வேண்டாம். வேண்டாம் வேண்டாம் ராமு டீச்சர் வேண்டாம் என முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பையும் காட்டி வருகின்றனர். அதோடு இந்த ஆசிரியர் இப்பள்ளியில் இருப்பதால், தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்காமல், தங்கள் கிராமத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் வரை தொலைவில் உள்ள வைரவன்பட்டி, தானிப்பட்டி, மேலையான்பட்டி, சோலுடையான்பட்டி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இந்த ஆசிரியர் குறித்து பலமுறை பெற்றோர்கள் புகார் அளித்தும் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.