சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சோலுடையான்பட்டியைச் சேர்ந்தவர் சின்னகாளை இவரது மகன்கள் மலைச்செல்வன் (40), நெவுலியப்பன் (37). கூலி தொழில் செய்து வரும் இருவரில், மலைச்செல்வனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் சகோதரர்கள் இருவரும் இரவு சுண்ணாம்பிருப்பு வழியாக திருப்பத்தூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தேவகோட்டையில் இருந்து மதுரையை நோக்கி சென்ற அரசு பேருந்து சுண்ணாம்பிருப்பு விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரர்கள் இருவரும் பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் நெவுலியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மலைச்செல்வன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்த நெவுலியப்பனின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மலைச்செல்வனும் உயிரிழந்தார். தம்பி இறந்த மூன்றாவது நாளில் அண்ணனும் இருந்தது சோலுடையான்பட்டி கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.