சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் இன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தனது கொழுந்தியாவை அகத்திய முனிவர் வேடம் அணிந்து வந்து மாமன் வாழ்த்தி சென்றார். பொன்னமராதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரின் மனைவி பானுவின் தங்கை செளமியாவிற்கும், கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இன்று திருக்கோஷ்டியூரில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வந்த இளையராஜா தனது கொழுந்தியாள் மற்றும் சகலையை வாழ்த்துவதற்காக திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஆலயம் வீதியில் அகத்திய முனிவர் வேடம் அணிந்து நடந்து வந்து அருகில் உள்ள மண்டபத்திற்குள் நுழைந்தார். அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு அவரை பார்வையிட்டனர். பின்பு மேடை ஏறி நமச்சிவாய என சொல்வோமே என்ற பாடல் வரிக்கு ஏற்றவாறு வாயசைத்து பாடல் பாடினார். பின்பு கையில் இருந்த கமெண்டலத்தில் இருந்த தண்ணீரால் மணமக்களை வாழ்த்தினார். மேடையில் இருந்த மணமக்கள் இது யார் என்று தெரியாமல் சிறிது நேரம் அமர்ந்தபடி மெய் மறந்தனர். அதன் பின்பு தனது மாமன்தான் என மணமகளுக்கு தெரிந்ததும் எழுந்து வணங்கி வாழ்த்து பெற்றனர். கொழுந்தியாவின் திருமணத்திற்காக அகத்தியர் வேடம் அணிந்து வந்த மாமனை பார்த்ததும் சொந்த பந்தங்கள் எல்லாம் சூழ்ந்து புகைப்படமும், செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.