சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் வளர் மீட்பு பூங்கா, மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார மையம், மற்றும் வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் பேரூராட்சி அந்தஸ்தில் இருந்தும் ஒரு பேருந்து நிலையமோ? வணிக வளாகமோ? அமைப்பதற்கு இப்பேரூராட்சி பகுதிகளில் இடமில்லாமல் ஊரே ஊரணியாகத்தான் இருந்து வருகிறது. இதனால் இங்கு அரசின் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்த முடியவில்லை. மேலும் ஊரைச் சுற்றிலும் சுமார் 44 ஊரணிகள் இருந்து வருகிறது. ஆனால் அதில் பாதிக்கு மேல் மக்களின் பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே முற்றிலும் நீர் பிடிப்பு பயன்பாடு இல்லாமல் இருக்கும் ஊரணி, குளம்குட்டை போன்ற பகுதி நிலங்களை மறு வரையறை செய்து பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைத்து அரசுக்கு வருவாய் ஈட்டும் வழிவகை செய்ய வேண்டும் என பேரூராட்சி மன்ற சேர்மன் கே பி எஸ் பழனியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர். கோரிக்கையை ஏற்று இதுகுறித்து பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் திட்ட பணிகளின் ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.