சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியம், முசுண்டபட்டி ஊராட்சிக்குட்பட்ட திருமலைக்குடி கிராம பகுதியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறையின் சார்பில், பழமரக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை, மாவட்ட வருவாய் அலுவலர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவர்களை பயன்பெற செய்து வருகிறார்கள்.
மேலும் தரிசு நிலத் தொகுப்பினை, பசுமை நிறைந்தவையாக உருவாக்கிடும் பொருட்டு, அரசின் திட்டங்களின் கீழ் தமிழக முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022-ம் ஆண்டுகளுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்” அறிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.