சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ். புதூர் ஒன்றியம் கீழவண்ணாரிருப்பு கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் பிரான்மலை கீழ் பகுதியில் வருடம் முழுவதும் நெல், கடலை, கத்திரி, மிளகாய், வெண்டைக்காய், என பல்வேறு காய்கறிகள் விளையும் பகுதி சுமார் 150 ஏக்கர் விளை நிலங்கள் உள்ள பச்சை பசேல் என இயற்கை வளம் கொழிக்கும் பகுதியாக அமைந்துள்ளது.
இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உரத்துப்பட்டி கிராமமும், 2 கிலோமீட்டர் தொலைவில் மேலவண்ணாரிருப்பு கிராமமும் உள்ளது. இங்குள்ள மாணவர்கள் மேலவண்ணாரிருப்பில் உள்ள எஸ். புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கேசம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர். மேலவண்ணாரிருப்பில் இருந்து கீழவண்ணாரிருப்பு உரத்துப்பட்டி வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை பட்டா இடங்களில் ஏனாதானோ என தார் சாலை அமைத்தும் வனப்பகுதியில் உள்ள சாலை வனத்துறை அனுமதி வழங்காததால் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க முடியாமல் கரடு முரடாக உள்ளது. சாலை அமைக்க கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்