சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே ஆ. தெக்கூர் கிராமத்தில் அருள்மிகு பச்சை மூங்கிலுடைய அய்யனார் கோயில் உள்ளது. கடந்த ஆண்டில் பொங்கல் விழாவின்போது கிராமத்தாருக்கு கட்டுப்படாமல் மஞ்சுவிரட்டு ஒரு பிரிவினர் நடத்தினர். இதன் காரணமாக ஊர் முக்கிய பிரமுகர்கள், கரைகாரர்கள் மற்றும் அம்பலங்கள் மீது நெற்குப்பை போலீஸார் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். அனைவரும் பிணையில் வெளிவரும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்தமாதம் பொங்கல் அன்று ஊரார்களின் எதிர்ப்பை மீறி எவ்வித அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினால் கடந்த ஆண்டைப் போல தங்களுக்கு பிரச்னை வரும். எனவே மஞ்சுவிரட்டு போட்டி நடத்த தடை விதிக்க வேண்டுமெனவும், மீறி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.