சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 10ம் தேதி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் மஞ்சுவிரட்டு போட்டி இன்று விமர்சையாக நடைபெற்றது. முன்பாக அதிகாரிகள் உறுதிமொழி வாசிக்க மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதனை அடுத்து தொழுவிலிருந்து முதலில் கோயில்காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக 203 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 27 வீரர்கள் என, 54 பேர் களம் இறங்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், காளையர்களை மிரட்டியபடி பிடிபடாமல் சென்ற காளைகளுக்கும் விழா குழுவின் சார்பில் சில்வர் அண்டாக்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. முன்னதாக சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்டுமாடுகளாக 300-க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு திடலில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது. இக்காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 34 பேர் காயமடைந்தனர். இதில் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் 13 பேர் அருகிலுள்ள திருப்பத்தூர், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.