சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் மாசி மகத் தெப்ப உற்சவம் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.
உலகப் புகழ் பெற்ற திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களுள் மாசி மகத் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து 50, 000 மேற்பட்ட பக்தர்கள் குவிவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி மக தெப்ப திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து தினமும் பெருமாள் தேவியருடன் பல வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடந்தது.
இன்று சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதி புறப்பாடும், முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்களின் சேவைக்குப் பின்னர் தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். மண்டபத்தில் பெருமாளுக்கு திருவந்திக்காப்பும், தீபாராதனையும் நடந்தது.
தெப்பக்குளத்தில் சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோலமிட்டு விளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.