சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து இப்பள்ளியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மைதானத்தில் மாணவ மாணவிகள் உடற்பயிற்சியினையும், விளையாட்டு போட்டிகளையும் கற்று வருகின்றனர். மூன்று தலைமுறைகளாக பல கல்வியாளர்களையும், அரசு அதிகாரிகளை உருவாக்கிய பள்ளி மைதானத்தில், இரவு நேரத்தில் அத்துமீறி நுழையும் இளைஞர்கள் மது அருந்துவதும் அருந்திய பாட்டில்களை விட்டுச் செல்லுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களும் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி, விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் உடைந்த பாட்டில்களை மிதித்து பலர் காயம் அடைந்து வருகின்றனர். கல்வி கற்கும் கூடமாக விளங்கி வரும் அரசு பள்ளி, மதுபானப் பிரியர்களால் பாராக மாறி வருவது இப்பகுதி பொதுமக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. எனவே கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கு இரவு காவலர்களின் நியமித்து இது போன்ற சமூகவிரோத செயல்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை விடப்பட்டுள்ளனர்.