சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் வசித்து வரும் சுவாமிநாதன் குடும்பத்தினர் கடந்த ஐந்து தலைமுறைகளாக இப்பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அதனை செயல்படுத்தி வந்தனர்.
காலப்போக்கில் அதன் பயன்பாடு மாறிப்போகவே தற்காலத்திற்கு ஏற்றவாறு தண்ணீரை நவீனமாக வழங்க வேண்டும் என்று குடும்பத்தினரால் முடிவு எடுக்கப்பட்டு சுமார் 6.50 லட்சம் மதிப்பீட்டில் RO வாட்டர் பிளாண்ட் அமைத்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கும் விழா இன்று நடைபெற்றது. இதுகுறித்து சுவாமிநாதன் கூறுகையில் எங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்து இச்சேவையை நாங்கள் ஒரு சமூகத் தொண்டாக தொடர்ந்து செய்து வருகிறோம்.
காலத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் நவீனமாக அதனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் எனது தந்தையின் கனவை நனவாக்க RO பிளாண்ட் அமைத்து தள்ளாடும் வயதில் உள்ள என் தாயை கொண்டு இதனை திறக்க வைத்தது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை என் தாய் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார். தந்தையின் கனவை நனவாக்க தனயனின் இச்செயல் இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.