சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாசி மகப் பெருவிழாவையொட்டி உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
லட்சக்கணக்கானோர் கூடும் இந்த மஞ்சுவிரட்டில் மழை பெய்து வருவதால் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குறைவான மக்களே மஞ்சுவிரட்டை கண்டு கழிக்க வந்திருந்தனர். உலகப்புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு வயல் வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் கட்டு மாடுகளாக நிறுத்தி வைத்திருந்தனர். அரளிப்பாறை கீழ் பகுதியில் தொழுவின் முன் வாடிவாசல் அமைக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 100 காளைகள் தொழுவில் அடைக்கப்பட்டன, களத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாடுபிடி வீரர்கள் 30 பேர் களமிறக்கப்பட்டனர்.
ஐந்துநிலை நாட்டார்கள் ஜவுளி எடுத்து அரளிப்பாறை மலை உச்சியில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படடு தொழுவில் உள்ள கோவில் காளைகளுக்கு வேட்டி வழங்கி முதல் மரியாதை செய்தனர். முதலில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து தொழுவில் உள்ள மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன, மாடுபிடி வீரர்கள் என 53 பேர் காயமடைந்தனர்.