சிவகங்கை நகராட்சியில் தினமும் சுமார் 13. 08 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதற்குரிய நிரந்தர கிடங்கு இல்லாததால், நகரம் முழுவதும் குப்பைகள் சிதறிப் போயுள்ளன. குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பின்புறம் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் அருகில் வாழும் பொதுமக்களுக்கும் மூச்சுத் திணறல், துர்நாற்றம் போன்ற சுகாதார சிக்கல்கள் ஏற்படுகின்றன. முன்பு சுந்தரநடப்பில் உள்ள நகராட்சி கிடங்கில் குப்பைகள் தேங்கியிருந்தன. ஆனால் மக்கள் எதிர்ப்பினால் அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், மானாமதுரை சாலை, காளவாசல், மருதுபாண்டியர் நகர் போன்ற இடங்களில் தரம் பிரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. மக்கும் குப்பைகளில் நுண் உரம் தயாரிக்கவும், பிளாஸ்டிக் குப்பைகளை சிமென்ட் ஆலைக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டது.
ஆனாலும், சேகரிக்கப்படும் மொத்த குப்பையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான அளவே தரம்பிரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இதனால் தரம் பிரிக்கும் மையங்களிலும் குப்பைகள் தேங்குவதுடன், நகரின் பல பகுதிகளில் தீ வைத்து குப்பைகள் எரிக்கப்படும் நிலை தொடர்கிறது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் இதுவரை முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.