ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திரப் போர் தொடங்கி வெற்றி கண்டவர் ராணி வேலுநாச்சியார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் சிவகங்கை சூரக்குளம் பகுதியில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ராணி வேலுநாச்சியாரின் 295வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராணி வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், மானாமதுரை தொகுதி எம்எல்ஏ தமிழரசி, காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் அசோகன், அமமுக மாவட்டத் தலைவர் தேர் போகிபாண்டி, வி.சி.க மாவட்டச் செயலாளர் பாலையா, த.வெ.க கட்சியின் சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர் பர்வேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.