சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். அப்பகுதியில் உள்ள கல்லூரணி கண்மாயில் இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லிப்பட்டினம், மாணிக்கவாசக நகர், சாலையூர் பகுதிகளிலிருந்து கழிவுநீர் கலக்கப்படுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் இந்த மாசுபட்ட நீரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீரை தடுத்து நிறுத்தி கண்மாயை சீரமைக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி கண்மாயை சுத்திகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கழிவு நீரை தடுத்து நிறுத்தி அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கடந்த மக்களவை தேர்தலை அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று வரை மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.