சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தத் துறையின் அமைச்சர் மெய்யநாதன், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட புதிய கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், “புதுமைப்பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கூடியுள்ளது” என்றும் கூறினார். அத்துடன், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 36 கல்லூரி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 10 விடுதிகள் திறக்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக இதுவரை ரூ. 1242 கோடி வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை விநியோகத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அதை தலைமையகம் மூலம் நேரடியாக கண்காணிக்க ஒரு புதிய மையக் கண்காணிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதனுடன், Wi-Fi நெட்வொர்க் இணைப்புகள் மூலம் உலகின் எந்த நூலகத்தையும் அணுகும் வசதி கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக, ரூ. 10. 59 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றனர்