சிவகங்கை அருகே மேலச்சாலூரில் மஞ்சுவிரட்டு போட்டியில் 10 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ பெருமாள் பொன்னழகி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. கோயிலில் வழிபாடு செய்த கிராம மக்கள் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு தொழுவுக்கு சென்றனர். அங்கு காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டன.
தொழுவில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டதைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொழுவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. முன்னதாக ஆங்காங்கே கட்டுமாடுகளாக 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், சிவகங்கை, திருப்பத்தூர், மேலூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.