சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றத்துடன் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிலையில் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை என்ற விவசாயி தங்கள் பகுதியில் காட்டுப் பன்றிகளால் நடவு செய்யப்பட்ட பயிர்கள் முழுவதும் நாசப்படுத்தப்படுவதாகவும் எனவே அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பேசினார். இதை கேட்ட ஆட்சியர் விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவது காட்டுப்பன்றியா? அல்லது நாட்டு பன்றியா? என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளதாகவும் அந்த குழுவின் அறிக்கைக்கு பின்னரே அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டு பன்றிகளுக்கு மட்டுமே இழப்பீடு தொகை வழங்க அனுமதி உள்ளதாகவும் கூறினார். இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.