வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள மீட்பு பணிகளை கண்காணிக்க 84 குழுக்கள், 81 நிவாரண மையம் அமைத்துள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கால மீட்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கலெக்டர் பேசியதாவது, பருவ மழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக 84 இடங்களை கண்காணிக்க, வட்ட அளவில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க 81 நிவாரண மையம் அமைக்கப்படும். பருவ மழை சேத மீட்பாளர்களாக 2, 158 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 300 பேர்களுக்கு மீட்பு பணி குறித்த பயிற்சி அளித்துள்ளோம். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை காலங்களில் தண்ணீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். இயற்கை பேரிடர் குறித்து 1077 மற்றும் 04575 - 246 233 என்ற எண்ணிற்கு தகவல் தரலாம், என்றார்.