சிவகங்கை மாவட்டம் அலவாகோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. திருக்கோவிலில் சீனிவாச பெருமாள் இரு தாயார்கள் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமிகள் தனித்தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருமஞ்சனம் மற்றும் 1008 லட்சார்ச்சனை வைபவம் நடைபெற்றது.
முன்னதாக நின்ற நிலையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து வெற்றிலை மாலை மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகளும் கற்பூர ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டன. பின்னர் சுவாமி சன்னதி முன்பு ஏராளமான பட்டாச்சாரியார்கள் ரோஜா இதழ்கள் கொண்டு ஏக தின லட்சார்ச்சனை மற்றும் அனுமந்த சகஸ்ரநாம அர்ச்சனை 12 முறை பூர்த்தியானதும் நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர்.