சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வெள்ளிகுறிச்சி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகளை நிகழ்த்தினர்.
25-வது ஆண்டாக நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினர். பக்தர்கள் செம்பராயனேந்தல் பகுதியில் உள்ள வைகை ஆற்றிற்கு சென்று, ஆன்மீக குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் அலகு குத்தி, மயில் காவடி, பறவை காவடி மற்றும் பால் குடங்களை சுமந்து, கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர்.
பாதையில் ஏராளமானோர் காவடிகளை வழிபட்டனர். கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை அம்சங்களுக்கு சிறப்பு பால் அபிஷேகம், பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிகுறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.