சாலை அமைப்புப் பணிகள் இடைநிறுத்தம் – கிராம மக்கள் அவதி

80பார்த்தது
சிவகங்கை மாவட்டம் டி. வேலாங்குளம் விலக்கில் இருந்து மாரநாடு விலக்கு வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 1. 60 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணி மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த சாலை திட்டம், சலுப்பனோடை, பிச்சைப்பிள்ளையேந்தல், தாழிக்குளம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் சாலையை அகற்றும் பணி மட்டும் நடைபெற்று, பின்னர் ஒரு மாதம் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. மக்கள் தரப்பில் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் வெளிப்பட்ட பிறகு, பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால் பத்து நாட்கள் மட்டுமே சரளைக் கற்கள் பரப்பப்பட்டு, அதன்பின் மீண்டும் பணிகள் முற்றிலும் நின்றுவிட்டதாக தகவல்.
இதனால் தற்போது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசியமான வாகனங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், ஆட்டோக்கள் மூலமாகவே போக்குவரத்து மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் பள்ளி செல்லும் போது கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சிய போக்கையே காரணமாகக் குற்றம் சாட்டுகின்றனர். பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி