சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள திருப்புவனத்தைச் சுற்றிலும் திருப்பாச்சேத்தி, மடப்புரம், மழவராயனேந்தல், லாடனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னந்தோப்புகளில் காவலுக்கு குடும்பம் குடும்பமாக கூலி தொழிலாளர்கள் இருப்பது வழக்கம். ஆண்டு சம்பளத்தில் இவர்கள் முழு நேரமும் தென்னைமரங்களில் இருந்து உதிரும் மட்டைகளில் இருந்து மூன்று, இரண்டு, ஒரு மடை தட்டிகள், துடைப்பம், விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து தென்மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். துடைப்பம் இங்கிருந்து திருநெல்வேலி, துாத்துக்குடிக்கு அதிகளவு செல்கிறது. கால மாற்றத்தால் தென்னங்கீற்றுகள் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனையே நம்பி இருந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வறட்சி மற்றும் 4 வழிச்சாலை விரிவாக்கத்தால் தென்னை மரங்களும் அழிந்து வருகின்றன. தென்னை மர விவசாயத்தை ஊக்குவிக்கவும் தென்னை சார் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தென்னை மர விவசாயத்தை விட்டு விட்டு மாற்று விவசாயத்திற்கு சென்று விட்டதால் தொழிலாளர்களும் மாற்று தொழில் தேடி வருகின்றனர்