சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவகம் முன்பாக தமிழ்நாடு மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிற்சங்க ஒன்றியத் தலைவர் திரு. மோசஸ் தலைமை வகித்தார். சிபிஐ ஒன்றிய செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் குறைந்தபட்ச கூலியாக அரசு நிர்ணயித்துள்ள ரூ. 336 வழங்கப்பட வேண்டும், ஒவ்வொரு அட்டைதாரருக்கும் உடனடியாக வேலை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், 100 நாள் வேலை திட்டத்திற்கு 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனக் கோரினர்.
அதனைத் தொடர்ந்து, குடிமனை இல்லாத அனைவருக்கும் உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும், அன்றாடம் அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், கலைஞர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக விரிவாக்கி, தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.