சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு நகர பள்ளிக்கூடத்தில் ஆண்டுதோறும் ரத்தினவேல் பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நகர சிவன் கோவிலில் இருந்து திருநாவுக்கரசு செட்டியார் ரத்தினவேலினை எடுத்து வந்தார். ரத்தினவேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து முக்கிய நீதி வழியாக நகர பள்ளிக்கூடம் வந்தடைந்தது.
வேல் வரும் வழியில் பக்தர்கள் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து நகரப் பள்ளிக்கூடத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த முருகர் கையில் ரத்தினவேல் வைத்து மகா தீபாராதனை காண்பித்தனர். பின்னர் 16 மூட்டை அரிசிகளால் வடிக்கப்பட்ட சாதத்தின் மேல் செப்பு வேல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.