சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுநல்லூர் ஊராட்சி, கடம்பாகுடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 99 ஏக்கர் பரப்பளவில் கடம்பாகுடி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கண்மாய்க்கு மராமத்து செய்யப்படாத நிலையில் பாசன வசதிக்காக நான்கு மடைகள் அமைக்கப்பட்டுள்ளது அதில் மூன்று முக்கியமான மடைகள் சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
தற்போது கண்மாயின் கரையை உடைத்து தும்புகள் பதித்தும் மோட்டார் மூலமாகவும் தண்ணீர் பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மழை பெய்யும் நீரை சேமித்து வைக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும்
மழைக்காலம் நெருங்கி வருவதால், கண்மாயை விரைந்து சீரமைத்து, விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஜித்திடம் மனு அளித்துள்ளனர்.