சிவகங்கை மாவட்டம், மதகுபட்ட அருகே வீழனேரியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
வீழனேரி அதிமுக கிளைச்செயலர் சுப. லோகநாதத்தேவர்(எ) கண்ணு அம்பலத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளைமுன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடத்தப்பட்டது.
வீழனேரியிலிருந்து தொடங்கி இராமலிங்கபுரம், மதகுபட்டி, நகரம்பட்டி வழியாக வீழனேரியில் நிறைவடையும் வகையில் 6 மைல் சுற்றுத் தொலைவு பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில் 33 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. இப்போட்டியில், திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகளும் சாரதிகளும் பங்கேற்றனர்.
போட்டி தொடக்க நிகழ்வுக்கு, மாட்டு வண்டி எல்கைப்பந்தய சங்க மாநிலத்தலைவர் மோகன்சாமிகுமார் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
விறுவிறுப்பாக ஒரே பிரிவாக நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டி தொடங்கி அடுத்த 25 இடங்களை வென்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும்சாரதிகளுக்கும் விழாக்குழுவினரால் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரம் முதல் 25 -ஆவது பரிசு 1502 வரை மொத்தம் ரூ. 3 லட்சத்தி 25 ஆயிரத்து 550 தொகை ரொக்கப் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இந்த பந்தயத்தை வீரனேரி, சொக்கநாதபுரம், ராமலிங்கபுரம், நடராஜபுரம், மதகுபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று கண்டு களித்தனர்.