சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த போட்டியில் பெரிய மாடு வகையில் 9 ஜோடிகள், சிறிய மாடு வகையில் 23 ஜோடிகள் என மொத்தம் 32 ஜோடிகள் பங்கேற்றனர். போட்டியில சிவகங்கை , மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சாவூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாட்டு வண்டிக்கு 10 மைல், சிறிய மாட்டு வண்டிக்கு 8 மைல் தூரம் பந்தய எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டது. போட்டி, சிவகங்கை–தொண்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக விறுவிறுப்பாக நடைபெற்றது.
பந்தயத்தில், எல்லையில் கொடியை முன்வைத்து வெற்றி பெற்ற முதல் நான்கு மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த போட்டியை காண, நாட்டரசன் கோட்டை, கண்டனிப்பட்டி, சாத்தனி, கீரனூர், கொல்லங்குடி, அழகாபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.