வாழப்பாடி: டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஹட்சன் டைரிக்கு கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுமார் 10, 000 லிட்டர் பால் ஏற்றுமதி செய்து வருகின்றனர். தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் சங்கர் கருமந்துறை மலையிலிருந்து வழக்கம்போல் 10ஆயிரம் லிட்டர் பாலை லாரியில் ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் கொண்டு செல்லும்போது ஏரி வளவு கீரைக்காடு என்ற கொண்டை ஊசி மலைப்பகுதியில் சென்றபோது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதில் லாரியில் இருந்த பத்தாயிரம் லிட்டர் பால் கீழே கொட்டி சேதமானது. மேலும் காயமடைந்த ஓட்டுனர் சங்கர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவ்வழியாக வந்த பொதுமக்கள் சங்கரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு முதல் சிகிச்சை உதவிக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.