ஏற்காடு: மின்சாரம் தாக்கி மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்

1880பார்த்தது
ஏற்காடு: மின்சாரம் தாக்கி மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஜெரினாகாடு பகுதியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று ஏற்காடு மாரமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 32) என்பவர் கோவில் அருகே உள்ள மரத்தில் ஏறி மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மரத்தின் மேல் பகுதியில் சென்ற உயர் மின்அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக வெங்கடேசன் மீது உரசியது. இதனால் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் மரத்திலேயே தொங்கியபடி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை உடனடியாக துண்டித்து மரத்தில் இருந்து வெங்கடேசனின் உடலை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மரத்தில் ஏறி மின் விளக்கு அமைத்தபோது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஏற்காட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி