சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து கீரைக்காடு, வாழவந்தி, கொட்டச்சேடு, குப்பனூர் வழியாக சேலத்துக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட தயாரானது.
இதில் பயணிகள் ஏராளமானவர்கள் ஏறி அமர்ந்தனர். ஆனால் பஸ்சின் முன்பக்க டயர் திடீரென பஞ்சரானது. பின்னர் பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு திரும்ப முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 1 மணி நேரம் காத்திருந்து அடுத்ததாக மாலை 6. 35 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் ஏறி சென்றனர்.
இதனிடையே பஞ்சரான அரசு பஸ் பழுது சரிசெய்யப்பட்டு மாலை 6. 40 மணிக்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் இந்த பஸ் 40 அடி பாலம் அருகே சென்ற போது அந்த பஸ்சின் டயர் மீண்டும் பஞ்சரானது. இதனால் அதில் இருந்த பயணிகள் பின்னால் வந்த தனியார் பஸ்சில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.