எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது. பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வந்தது. நேற்று மாலை எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென மிக கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
எடப்பாடி நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். எடப்பாடி வார சந்தை, சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழையால் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைந்தே காணப்பட்டது.
இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் பெய்த திடீர் கனமழையால் அப்பகுதியில் நிலவி வந்த கடுமையான வெப்பம் தணிந்து இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது, உரிய நேரத்தில் பெய்த திடீர் மழையால் இப்பகுதி விவசாயிகள் கோடை உழவுக்கு தயாராகி வருகின்றனர்.