தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், மலைவாழ் மக்களுக்கான மிளகு மற்றும் காபி உற்பத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை உத்திகள் குறித்த பயிற்சியை நடத்தியது. மேலும் மலைவாழ் மக்களுக்கு விதை, இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கோ. மாலதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மலைவாழ் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து பேசினார். பயிர் சாகுபடியில் உயிர் உரங்கள், உயிர் பூஞ்சான கொல்லிகள் உபயோகப்படுத்துதலின் முக்கியத்துவம் குறித்தும் செலவினை குறைத்து நிகர வருமானத்தை அதிகப்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இணை பேராசிரியர் செந்தில்குமார், மிளகு, காபி பயிர்களில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை மற்றும் அட்மா திட்ட தலைவர், அலுவலர்களும் தங்களது துறைகள் குறித்து விரிவாக விளக்கினர்.
பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வீட்டு தோட்ட காய்கறி, குத்து அவரை, தட்டை பயறு உள்ளிட்ட விதைகளும், பயிர்களில் நோய் வராமல் தடுக்க உதவும் டிரிக்கோடெர்மா என்ற எதிர் உயிர் பூஞ்சான கொல்லியும் வழங்கப்பட்டன.