தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறமுடியாமல் தவறவிட்டவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அவற்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தைத் திருநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, கரும்பு, வேஷ்டி, சேலை அடங்கிய பரிசுத் தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 34,793 நியாயவிலைக் கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கத் திட்டமிடப்பட்டது.
ஜன.9ம் தேதி தொடங்கிய இந்தத் திட்டம் நேற்று(ஜன.13)உடன் நிறைவடையும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறமுடியாமல் ஏமாற்றமடைந்தவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை கூறியுள்ளார். அதன்படி, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜன.13ம் தேதிவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் முடிந்து அவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் முதலமைச்சரிடம் உரிய அனுமதிபெற்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.