சேலத்தில் நேற்று இரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது

51பார்த்தது
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சேலம், ஏற்காடு, ஆத்தூர், ஆனைமடுவு, ஏத்தாப்பூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், சேலத்தில் நேற்று மதியம் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் மாநகரின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை, அழகாபுரம், கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும், திடீரென சூறாவளி காற்றும் வீசியதால் சாலையோரம் இருந்த சில மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த கனமழையால் சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலம் புதிய பஸ் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வெளியூர்களில் இருந்து வந்த பஸ்களும் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றதை காணமுடிந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி