சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று(செப்.15) நடைபெற்றது. விழாவையொட்டி நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று, யாக சாலையில் இருந்து புனிதநீர் கோவிலின் கோபுர கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் பாலமுருகன்சாமி கோபுர கலசம், உற்சவர் தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
தொடர்ந்து கஞ்சமலை கருங்காட்டு காளியம்மனுக்கும், கோபுர கலசத்திற்கும் புனித ஊற்றப்பட்டது. பின்னர் கஞ்சமலை சித்தேஸ்வர சாமி கோபுர கலசம், சித்தேஸ்வரர் மற்றும் சித்தி விநாயகர், பரிவார மூர்த்திகள், நவகிரக தெய்வங்கள், நந்தி, விநாயகர் உள்பட பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரங்கள் செய்யப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.