சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு ஊராட்சி பகுதியில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட கசப்பேரி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி இந்த ஏரி வறண்டு கிடந்தது. இந்த ஏரிக்கு நீர் நிரப்பும் வகையில், காவிரி உபரிநீரை வறண்ட 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் வடிகால் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காவிரி உபரிநீர் வெளியேற்றப்பட்ட போது 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன. அதன்படி வெள்ளாளபுரம் ஏரி நிரம்பி அங்கிருந்து குழாய் மூலம் ஏகாபுரம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து கால்வாய் வழியாக செங்குட்டப்பட்டி குட்டை, கந்தன்குட்டை வழியாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு தண்ணீர் கசப்பேரியை வந்தடைந்தது. தற்போது அதன் முழு கொள்ளளவான 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட கசப்பேரி நிரம்பி நேற்று இரவு உபரிநீர் மதகு வழியாக வெளியேற தொடங்கியது.
கடந்த 40 ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால் கசப்பேரியை காண மக்கள் குவிந்தனர். குறிப்பாக அப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று விவசாயம் செழிக்கும் என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள் ஒன்று கூடி ஏரி நிரம்பியதை கொண்டாடினர். இதையொட்டி ஏரிக்கரையில் ஒலிபெருக்கி வைத்தும், தோரணங்கள் கட்டியும், அதிர்வேட்டுகள் முழங்க கிடா வெட்டி பொதுமக்களுக்கு விருந்து வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.