சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த வழக்கில் சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கார் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், ஊராட்சிக்கோட்டை, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன் மகன் கண்ணையன் (31), தனது மனைவி அம்பிகா, மகள் சிவன்யாஸ்ரீ (3) மூவரும் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இரு சக்கர வாகனத்தில் காளிகவுண்டம்பாளையத்திலிருந்து பவானி நோக்கி கொண்டிருந்தபோது வைகுந்தம் பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கண்ணையன் அவரது மகள் சிவன்யாஸ்ரீ இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்இதில் அம்பிகா காயமடைந்தார்.
இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், உடையகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரவிச்சந்திரன் மகன் பாலவிக்னேஷை (31) கைது செய்து சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி பாபு குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.