சேலம்: 2 விநாயகர் கோயில்கள் கோர்ட் உத்தரவுப்படி இடிப்பு
சேலம் மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட பச்சப்பட்டி பகுதியில் அசோக்நகர்-1, 2 என்ற பெயரில் 2 பகுதிகள் உள்ளன. இங்கு 2 விநாயகர் கோயில்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தனியார் அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்கில், நடைபாதையில் உள்ள கோயில்களை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழிப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத்சிங் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்த 2 விநாயகர் கோயில்கள் மற்றும் சுற்றுச்சுவரை நேற்று (அக்.23) பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தினர். கோயில்கள் அப்புறப்படுத்துவதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில் சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.