சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குடல் மருத்துவத்துறை சார்பில் நேற்று உலக கல்லீரல் அழற்சி தினம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் மணிகாந்தன் கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்தவமனை வளாகம் முழுவதும் சென்றனர். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கும், சிறப்பு கவனத்திற்குரிய நபர்களுக்கும் ரத்த பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
ரத்த பரிசோதனை
நிகழ்ச்சியில் குடல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சிவசங்கர் பேசும்போது, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கல்லீரல் அழற்சி நோய்க்கு உயர் ரத்த பரிசோதனை சிகிச்சைகள் மற்றும் உயர்தர மருந்துகள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்லீரல் நோயை ஆரம்பத்தில் துல்லியமாக கண்டறியும் உயர் பரிசோதனையான வைபுரோ ஸ்கேன் இலவசமாக செய்யப்படுகிறது. என்றார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், உள்தங்கும் மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா, குடல் மற்றும் அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர் கார்த்திகேயன், டாக்டர் சிவசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.