சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (வயது 55). இவர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுத்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது: -எனது கணவர் அசோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நான் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறேன்.
இதனிடையே திடீரென அந்த பணம் எனக்கு வரவில்லை. இதுகுறித்து ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். அதைத்தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகள், உங்களது பெயர் இறந்தவர்களின் பட்டியலில் உள்ளதால் உரிமை தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றனர். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி மகளிர் உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெண்ணின் இந்த பரபரப்பான புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.