சேலம் மண்டல வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் (பிப்ரவரி) தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். இதில் 263 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டபோது கடந்த ஒரு மாதம் பல முறை வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் செல்போன் பேசியபடி கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்கள் ஓட்டி வந்த 69 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று சாலை விபத்தை ஏற்படுத்திய 62 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 19 பேர் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் ஓட்டி வந்த மொத்தம் 263 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.