திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் சேலம் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று (டிச.31) மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி மாணவ, மாணவிக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: - திருவள்ளுவர் உருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதன் வெள்ளி விழா கொண்டாட்டமாக சேலம் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறளின் பெருமையை உணர்த்தும் வகையில் கண்காட்சிகள் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியில் திருக்குறள் தொடர்பான ஓவியங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவைகள் காட்சிபடுத்தப்பட்டன.
மேலும் திருக்குறளின் பெருமையை உணர்த்தும் விதமாக மாணவ, மாணவிகள் மற்றும் நூலக வாசகர்களை கொண்டு கடந்த 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை திருக்குறள் குறித்த கருத்தரங்கம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 2 ஆயிரம் மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.